Thursday, April 19, 2012

விளையாடுவோம் வாருங்கள் -13

பாகம்-11 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் , தொடர்ந்து விளையாடுவோம்.

காயா பழமா?"


விளையாட்டின் பெயர் : நீந்தத் தெரியும் சிறுவர் நீரில் நின்று "காயா பழமா?" என்று கேட்டு விளையாட்டும் விளையாட்டு , அக் கேள்வியையே பெயராகக் கொண்டது.

விளையாடுவர்களின் எண்ணிக்கை  : இருவர் முதற் பலர் இதை ஆடுவர். இருவர்க்கு மேற்படின் இன்பஞ் சிறக்கும்.

விளையாடும் இடம்: ஆறுங் குளமும் போலும் நீர்நிலைகள் இதை ஆடுமிடமாம்.

விளையாடும் முறை : ஆடுவாரெல்லாரும் நீரில் நின்றுகொண்டு, ஒவ்வொருவனாய்க் "காயா, பழமா?" என்று கேட்டு நீருள் சுண்டுவர். சுண்டும் விரல் நீர்மேல்படின் 'தளார்' என்னும் ஓசை யெழும்; நீருள் முற்றும் முழுகின் ஓசையே கேளாது; பாதி முழுகின் 'டபக்கு' என்னும் ஓசை பிறக்கும். இவற்றுள், முன்னவை யிரண்டும் காயாம்; பின்னதொன்றும் பழமாம். காயாயின் "காய்" என்றும், பழமாயின் "பழம்" என்றும், பிறர் கூறுவர். பலர் காயாயின் மீண்டும் சுண்டுவர்.ஒருவனே காயாயின், அவன் பிறரை நீருள் பிடித்தல் வேண்டும். அவர் சிறிது தொலைவு சென்றபின், தம்மைப் பிடிக்கச் சொல்வார். அவன் விரைந்து சென்று, நடந்து செல்பவரை நடந்து சென்றும், நீந்திச் செல்பவரை நீந்திச் சென்றும், முழுகிச் செல்பவரை முழுகிச் சென்றும், பிடிக்கமுயல்வான். யாரேனும் தொடப்படின், அவனே பின்பு பிறரைப் பிடித்தல் வேண்டும். இங்ஙனம் தொடர்ந்து விருப்பமுள்ளவரைப் பிடித்து ஆடப்பெறும்.

விளையாட்டின் தோற்றம்: உள்ளான் என்னும் நீர்ப்பறவை நீருள் மூழ்கிச் சென்று மீன் பிடிப்பதினின்று, இவ் ஆட்டுத் தோன்றி யிருக்கலாம்.

விளையாட்டின் பயன் : நீருள் மூழ்கிய பொருளை யெடுத்தற்கும் முத்துக் குளித்தற்கும் ஏற்ற பயிற்சியை, இவ் விளையாட்டு அளிக்கும

                                                                                                                தொடரும் ....................

Wednesday, April 18, 2012

விளையாடுவோம் வாருங்கள் -12

பாகம்-11 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் , தொடர்ந்து விளையாடுவோம்.

மரக்குரங்கு
('கொம்பரசன் குழையரசன்')

விளையாட்டின் பெயர்  : சிறுவர் மரத்திற் குரங்குபோல் ஏறி விளையாடும் விளையாட்டு மரக்குரங்கு என்பதாம். இது பாண்டி நாட்டில் 'கொம்பரசன் குழையரசன்' எனஅழைக்க படுகிறது.

விளையாடுவர்களின் எண்ணிக்கை  : இருவர்க்கு மேற்பட்ட பலர் இதை ஆடுவர்.

விளையாடும் முறை: : விளையாடுபாரெல்லாரும் ஒரு மரத்தருகே ஒரு வட்டக் கோட்டுள் நின்றுகொண்டு ஒவ்வொருவனாய் இடக் காலை மடக்கித் தூக்கி, அதன் கவட்டூடு ஒரு கல்லையாவது குச்சையாவது எறிவர். குறைந்த தொலைவு போக்கியவன், பிறர் மரத்திலேறிப் பிடிக்கச் சொன்ன பின் அவரைப் பிடித்தல் வேண்டும். 

பிடிக்கிறவன் மரத்திலேறும்போது, சிலர் மரத்தி னின்றும் குதித்து வட்டத்திற்குள் போய் நின்று கொள்வர். சிலர் கிளைக்குக் கிளை தாவி
ஆட்டங் காட்டுவர். வட்டத்திற் குட்போய் நிற்கு முன் யாரேனும் தொடப் பட்டுவிட்டால், அவன் அடுத்த ஆட்டையில் பிறரை முன் சொன்னவாறு பிடித்தல் வேண்டும். 

மரக்கிளைகளிலிருக்கும்போது 'கொம்பரசன் குழையரசன்' என்று பாண்டி நாட்டுச் சிறுவர் தம்மைக் கூறிக் கொள்வர்.

விளையாட்டின் தோற்றம்  : குரங்குகளின் செயலினின்று இவ் ஆட்டுத் தோன்றியிருத்தல் வேண்டும்.

விளையாட்டின் பயன்  : மரமேறப் பயிலுதல் இவ் வாட்டின் பயனாம்.

                                                                                                         தொடரும் .....................

Tuesday, April 17, 2012

விளையாடுவோம் வாருங்கள் -11

பாகம்-10 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் , தொடர்ந்து விளையாடுவோம்.

பிள்ளையார் பந்து 

விளையாட்டின் பெயர் : பிள்ளையாரைக் குறிக்கும் ஒரு கல்லின் மேற் பந்தை எறிந்தாடும் விளையாட்டுப் பிள்ளையார் பந்து. இது திருச்சிராப்பள்ளி வட்டாரத்திற் பிள்ளையார் விளையாட்டு என சொல்லப்படுகிறது. 

விளையாடுவர்களின் எண்ணிக்கை  : பொதுவாக, பலர் இதை ஆடுவர். 

விளையாட்டு பொருள் : ஏறத்தாழ ஆறங்குல நீளமுள்ள ஒரு கல்லும், ஒரு பந்தும், இதற்குரிய கருவிகளாம். 

விளையாடும் இடம்: சுவரடியும் அதையடுத்த வெளிநிலமும் இதை ஆடுமிடமாம். 

விளையாடும் முறை: ஆடுவோரெல்லாரும் சமத் தொகையினவான இரு அணியாகப் பிரிந்துகொள்வர். ஒரு செங்கல்லை அல்லது சிறு நீளக் கல்லைப்
பிள்ளையாராகப் பாவித்து ஒரு சுவரடியில் சிறிது மணலைக் குவித்து அதில் அதை நட்டு, ஒரு கட்சியார் ஐங்கசத் தொலைவில் எதிர்நின்று 

ஒவ்வொருவராய் ஒவ்வொரு தடவை பிள்ளையாரைப் படுகிடையாகச் சாய்த்தற்குப் பந்தாலடிக்க, இன்னொரு கட்சியார் இரு பக்கத்திலும் பிள்ளையார்க்கும் அவருக்கும் இடையில் வரிசையாக நின்றுகொண்டு, எறியப்பட்ட பந்தைப் பிடிக்க முயல்வர். பிள்ளையாரைப் படுகிடையாய்ச் சாய்த்த பந்தை யாரேனும் அந்தரத்திற் பிடித்து விடினும், எறிந்த பந்து பிள்ளையார்மேற் படாவிடினும், பட்டும் அதைப் படுகிடையாய்ச் சாய்க்கா விடினும், எறியுங் கட்சியார் ஆள்மாறிக் கொண்டேயிருந்து அனைவருந் தீர்ந்த பின், எதிர்க் கட்சியார் அடிக்குங் கட்சியாராகவும் அடித்த கட்சியார் பிடிக்குங் கட்சியாராகவும், மாறல் வேண்டும்.

பிள்ளையாரைப் படுகிடையாய்ச் சாய்த்த பந்து பிடிக்கப் படாவிடின், பிடிக்க நின்ற கட்சியர் அனைவரும் உடனே ஓடிப்போய்ச் சற்றுத் தொலைவில்
இடையிட்டு நிற்பர். அடித்த கட்சியாரனைவரும் நெருக்கமாகக் கூடி நின்று, அவருள் ஒருவன் பந்தைத் தன் அடி வயிற்றின்மேல் வைத்து அது
வெளிக்குத் தெரியாமல் இரு கையாலும் பொத்திக்கொண்டும், பிறரும் தாம் பந்து வைத்திருப்பதாக எதிர்க் கட்சியாருக்குத் தோன்றுமாறு தனித்தனி
நடித்துக்கொண்டும், அவரிடையே பிரிந்து செல்வர். 

எதிர்க்கட்சியாருள் யாரேனும் ஒருவன், உண்மையாய்ப் பந்து வைத்திருப்ப வனை ஐயுறாது அவனுக்குப் பக்கமாக நிற்பின், பந்து வைத்திருப்பவன் திடுமென்று அவன்மேல் எறிந்துவிடுவான். அதோடு ஓர் ஆட்டை முடியும். 

அடுத்த ஆட்டை ஆடுவது ஆடகர் விருப்பத்தைப் பொறுத்தது.

விளையாட்டின் தோற்றம்   : ஒருகால், பிறமதப் பகைமை பற்றியும் கொள்ளையடித்தற் பொருட்டும்,  இடைக் காலத்திற் சில அரசரும் கொள்ளைத் தலைவரும் தெய்வச்சிலைகளை (விக்கிரகங்களை) உடைத்ததும் கவர்ந்ததும், இவ் விளையாட்டுத் தோற்றத்திற்குக் காரணமாயிருந்திருக்கலாம். கசினி மகமது, மாலிக்காபூர், திருமங்கை யாழ்வார் முதலியோர் செயல்கள், இங்குக் கவனிக்கத்தக்கன.

                                                                                                           தொடரும்......................

Monday, April 16, 2012

விளையாடுவோம் வாருங்கள் -10

பாகம்-9 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் , தொடர்ந்து விளையாடுவோம்.

பந்து விளையாட்டு 

துணியாலும் கயிற்றாலும் இறுகக் கட்டப்பட்ட உருண்டையை எறிந்தாடும் விளையாட்டு , பந்து எனப்படும். (பந்து = உருண்டையானது).

பேய்ப்பந்து

விளையாட்டின் பெயர் : பேய்த்தனமாக ஒருவன்மேலொருவன் எறிந்தாடும் பந்து, பேய்ப்பந்து எனப் பெயர் பெற்றிருக்கலாம்.

விளையாடுவர்களின் எண்ணிக்கை  : பெரும்பாலும் நால்வர்க்கு மேற்பட்ட பலர் ஆடுவதே இவ் விளையாட்டிற்கேற்றதாம். ஆடுவார் தொகை பெருகப் பெருக இவ் ஆட்டுச் சிறக்கும்.

விளையாட்டு பொருள் :ஆடுவார் எத்துணையராயினும் ஒரு பந்தே இவ் ஆட்டிற்குரியதாம்.

விளையாடும் இடம் : பொட்டலும் வெளிநிலமும் இதை ஆடுமிடமாம்.

விளையாடும் முறை : பலர் இடையிட்டு நின்றுகொண்டிருக்க அவருள் ஒருவன் பந்தை மேலே போட்டுப் பிடித்துக்கொண்டு, "பந்தே பந்து" என்று உரக்கக் கத்துவான். பிறர் "என்ன பந்து?" என்று கேட்பர். அவன் "பேய்ப்பந்து" என்பான். "யார் மேலே" என்று ஒருவன் கேட்க, அவன் "உன்மேலே" என்று
சொல்லிக் கொண்டு அவன்மேல் வன்மையாய் எறிவான். அது அவன்மேல் பட்டாலும் படும்; படாதுபோனாலும் போகும். பந்து யார் கைப்பட்டதோ அவன்
அதை ஓங்கி யார்மேலும் எறிவான். 

இங்ஙனம் விருப்பமுள்ள வரை மாறி மாறி அடித்து ஆடிக் கொண்டேயிருப்பர். யார் எறியினும் அவனுடைய வலிமைக்குத் தக்கவாறு வன்மையாய் எறிவதே வழக்கம்.

விளையாட்டின் தோற்றம்: குரங்கெறி விளங்காயினின்றோ, பேய்ச் செயலாகக் கருதப்பட்ட ஒரு பந்து வீழ்ச்சியினின்றோ, இவ் ஆட்டுத் தோன்றியிருக்கலாம்.

விளாமரத்திலிருக்கும் குரங்கைக் கல்லாலெறிய அது விளங்காய் கொண்டெறிவது, குரங்கெறி விளங்காயாம்.

விளையாட்டின் பயன் : சற்றுத் தொலைவில் நிற்கும் அல்லது இயங்கும் இருதிணைப் பொருள்கள் மேலுந் தப்பாது எறிதற்கேற்ற பயிற்சியை, இவ் விளையாட்டு அளிக்கும். வேட்டையாடல், போர் செய்தல், திருடனைக் கல்லால் அடித்தல் முதலிய வினைகட்கு இப் பயிற்சி ஏற்றதாம்.

                                                                                                                   தொடரும்.......................

Sunday, April 15, 2012

விளையாடுவோம் வாருங்கள் - 9

பாகம்-8 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் , தொடர்ந்து விளையாடுவோம்.

சோழ-கொங்குநாட்டு முறை

கில்லித்தாண்டு

பாண்டிநாட்டுச் சில்லாங்குச்சும் சோழ கொங்கு நாட்டுக் கில்லித்தாண்டும் ஒன்றுதான் . ஆயினும், இடவேறுபாடு காரணமாக, இரண்டு இடத்து ஆட்டிற்கும் பின்வருமாறு 

சில வேற்றுமைகள் உள்ளன

(1) பெயர் : சில்லாங்குச்சு என்பது கில்லி என்றும், கம்பு என்பது தாண்டு என்றும் அழைக்கப் படுகிறது.

பாண்டி நாட்டில், குச்செடுப்பவன் குச்சு நிலத்தில் விழுமுன் அதை அந்தரத்திற் பிடித்துக்கொள்வதற்கு ஒரு சிறப்புப் பெயரும் வழங்கவில்லை. சோழ கொங்கு நாடுகளில் அது உத்தம் அல்லது புட்டம் எனப் பெயர்பெறும். இது கீழ்வரும் கிட்டிப்புள்ளிற்கும் இணையானது.

'எடுத்து ஊற்றுதல்' என்னும் பாண்டிநாட்டுக் குறியீட்டிற்கு நேரான சோழ கொங்குநாட்டுக் குறியீடு 'கஞ்சிவார்த்தல்' என்பதாகும்.

(2) கருவி : சில்லாங்குச்சு ஒரு பக்கத்தில் மட்டுங் கூராயிருக்கும். ஆனால் கில்லி இருபக்கமும் கூராயிருக்கும். இது இருமுனையும் அடித்தற்கு வசதியாம்.

(3) முறை : இரு கட்சியார் ஆடுவதாயின், பாண்டி நாட்டில் அடிக்குங் கட்சியார் அனைவரும் ஒரே சமையத்தில் அடிப்பர். அவனவன் அடிக்குங் குச்சை அவனவன் உத்தியாளே எடுப்பன். சோழ கொங்கு நாட்டிலோ, அடிக்குங் கட்சியாருள் ஒருவனே ஒரு சமையத்தில் அடிப்பன். அவன் அடித்த குச்சை எதிர்க்கட்சியார் எல்லாரும் ஆடுகளத்தில் நின்று அவருள் யாரேனும் பிடிக்கலாம் அல்லது எடுக்கலாம். அடிக்குங் கட்சியாருள் ஒருவன் தொலைந்த பின் இன்னொருவன் ஆடுவன். இங்ஙனம் ஒவ்வொருவனாக எல்லாருந் தொலைந்த பின் ஓர் ஆட்டை ஒருவாறு முடியும். இங்ஙனம் ஆடுவது கிரிக்கட்டு (cricket) என்னும் ஆங்கில விளையாட்டை ஒரு புடை யொத்திருப்பதால், இவ் ஆட்டை 'இந்தியக் கிரிக்கட்டு' என நகைச்சுவையாகக் கூறுவது வழக்கம்.

பாண்டிநாட்டில், அடிக்கப்பட்ட குச்சுப் போய்விழுந் தொலைவை அளந்து அது கொண்டு வெற்றியைக் கணிப்பதில்லை. அடிக்குங் கட்சியர் அனைவருந்
தொலைந்தபின், எதிர்க்கட்சியார் ஆடல் வேண்டும். சோழ கொங்கு நாட்டிலோ,  தாண்டை அளவுகோலாக வைத்துக்கொண்டு, ஒவ்வொரு முறையும் அடிக்கப்பட்ட குச்சுப் போய்விழுந் தொலைவைக் கருவி கொண்டோ மதிப்பாகவோ அளவிட்டு, குறித்த தொகை வந்தவுடன் எதிர்க் கட்சியாரைக் 'கத்திக் காவடி' யெடுக்கச் செய்வர். குறித்த தொகை வருவதற்கு எத்துணைப்பேர் அடித்தனரோ, அத்துணைப் பேரும் குழியினின்று குச்சை மும்மூன்று தடவை தொடர்ந்தடித்துப் போக்கிய தொலைவிலிருந்து,

எதிர்க்கட்சியார் 'கத்திக் காவடி கவானக் காவடி' என்று இடைவிடாமல் மடக்கி மடக்கிச் சொல்லிக்கொண்டு குழிவரை வருதல் வேண்டும். இதுவே 'கத்திக் காவடி யெடுத்தல்' என்பது. கத்திக் காவடியெடுக்கும்போது இடையிற் சொல்லை நிறுத்திவிட்டால், முன்பு போக்கிய தொலைவினின்று மீண்டும் குச்சை முன்போல் அடித்துப்போக்கி, அது விழுந்த இடத்திலிருந்து மறுபடியும் கத்திக் காவடியெடுக்கச் செய்வர்.அதை யெடுத்து முடிந்தபின், முன்பு அடித்தவரே திரும்பவும் ஆடுவர். ஆகவே, கத்திக் காவடியெடுத்தல் தோற்றவர்க்கு விதிக்கும் ஒருவகைத் தண்டனை யெனப்படும்.

முதலில் அடித்த கட்சியார் அனைவரும் அடித்த பின்பும் குறித்த தொகை வராவிடின், அவர் தோற்றவராவர். ஆயின், அவர் கத்திக் காவடியெடுக்க
வேண்டியதில்லை. அடுத்த ஆட்டையில் எதிர்க்கட்சியார் அடித்தல் வேண்டும். இதுவே அத் தோல்வியின் விளைவாம். ஆகவே, கத்திக் காவடித்
தண்டனை எடுக்குங் கட்சியார்க்கன்றி அடிக்குங் கட்சியார்க்கில்லை யென்பதும் அறியப்படும். பாண்டிநாட்டில் எடுக்குங் கட்சியார்க்கு அவ் எடுத்தலேயன்றி வேறொரு தண்டனையுமில்லை.

கிட்டிப்புள்

கிட்டிப்புள் என்பது கில்லித்தாண்டின் மற்றொரு வகையே. இரண்டிற்குமுள்ள வேறுபாடாவன :

பெயர் : கில்லி என்பது புள் என்றும், தாண்டு என்பது கிட்டி என்றும் பெயர்பெறும்.

முறை : கில்லித்தாண்டில், குச்சு குழியின் நீட்டுப் போக்கில் வைத்துக் கோலால் தட்டியெழுப்பி யடிக்கப் பெறும். கிட்டிப் புள்ளிலோ, குச்சுக் குழியின்
குறுக்கே வைத்து அதற்கு நட்டுக் குறுக்காக ஒரு கோலைப் பிடித்து அது கையினால் தட்டியெடுக்கப் பெறும். கில்லித்தாண்டில், அடிக்கப்பட்ட குச்சை
எடுப்பவன் எடுத்தெறிந்தபின், அதை அடிப்பவன் எந்நிலையிலும் அடிக்கலாம். ஆயின், கிட்டிப்புள்ளில், அது இயக்கத்தில் (அசைவில்) இருக்கும் போதே
அதை அடித்தல்வேண்டும். அசைவுநின்று கிடையாய்க் கிடந்தபின், அதை அடித்தல் கூடாது. அடிப்பின், அடித்தவன் தவறியவனாவன். அதனால், எடுத்தெறிந் தவன் அடிக்கவேண்டியிருக்கும். இயங்குங் குச்சு நட்டுக்கு நிற்கும்போது அடிக்கப்படின், அது கில்லிக்குத்து எனப்படும்.

குச்சுப் போம் தொலைவை அளப்பதும் கத்திக்காவடி எடுப்பதும் கிட்டிப்புள்ளில் இல்லை. பிறவகையில் இது பெரும்பாலும் சில்லாங்குச்சை ஒத்திருக்கும்.

பெரும்பாலும் சிறுவரே, அவருள்ளும் இருவரே, இவ் விளையாட்டை ஆடுவர். கோலால் குச்சைத் தட்டி யெழுப்பி அடிக்கமுடியாத இளஞ்சிறார்க்கென இவ் ஆட்டு எழுந்ததாகக் கூறுவர். சேரநாடாகிய மலையாள நாட்டில் கொட்டிப்புள் என வழங்கும் ஆட்டு, சில்லாங்குச்சைச் சேர்ந்ததே.

                                                                                                             தொடரும் ...........................

Saturday, April 14, 2012

விளையாடுவோம் வாருங்கள் - 8


பாகம்-7 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் , தொடர்ந்து விளையாடுவோம்.

சில்லாங் குச்சு

பாண்டிநாட்டு முறை

விளையாட்டின் பெயர் : சில்லாங்குச்சு என்னும் ஒரு சிறு குச்சை ஒரு கோலால் தட்டி ஆடும் ஆட்டு சில்லாங்குச்சு எனப்படும். இப் பெயர் சிறுபான்மை சீயாங்குச்சு எனவும் மருவி வழங்கும்.

விளையாடுவர்களின் எண்ணிக்கை  : இவ் விளையாட்டை ஆடக் குறைந்தது இருவர் வேண்டும். பலராயின் உத்திகட்டிச் சமதொகையான இருகட்சியாகப் பிரிந்துகொள்வர்.

விளையாட்டு பொருள்  : இருவிரல் முதல் அறுவிரல் வரை நீளமும், இருவிரல் முதல் நால்விரல் வரை சுற்றளவும், ஒரு நுனியில் கூர்மையும் உள்ள ஓர் உருண்ட குச்சும்; ஒரு முழம் முதல் இரு முழம் வரை (அவரவர் கைக்கேற்றவாறு) நீளமும், இருவிரல் முதல் நால்விரல் வரை சுற்றளவும், ஒரு தலையிற் சிறிது கூர்மையும், உள்ள ஓர் உருண்ட கோலும்; இவ் விளையாட்டிற்குரிய கருவிகளாம். பெரும்பாலும் குச்சும் கோலும் ஒரே சுற்றளவினவாக இருக்கும்.  கோலைக் கம்பு என்பர்.

ஆடுவார் இருவராயினும் பலராயினும், ஒவ்வோர் இணையர்க்கும் ஒவ்வொரு கோலுங் குச்சும் இன்றியமை யாதன. சில சமையங்களில் ஒவ்வொருவனும் தான் தான் பயின்ற அல்லது தன் தன் கைக்கேற்ற கருவிகளைத் தனித்தனி வைத்துக்கொள்வதுமுண்டு.

குச்சை மேனோக்கிய சாய்வாக வைத்து அதன் கூர்நுனியிற் கோலால் தட்டியெழுப்புமாறு, குச்சிற் பாதியளவு நீளமும் அரைவிரல் முதல் ஒருவிரல் வரை ஆழமும் உள்ள ஒரு சிறு பள்ளம் நிலத்திற் கில்லப்படும். குச்சைப் பள்ளத்தில் வைத்திருக்கும்போது, அதன் அடிப்பக்கம் (அல்லது மொட்டைப் பக்கம்) பள்ளத்திலும், அதன் நுனிப்பக்கம் (அல்லது கூரிய பக்கம்) வெளியிலும் இருக்கும்.

விளையாடும் இடம்   : அரைப் படைச்சால் (? furlong) சதுர அல்லது நீள்சதுர நிலப்பகுதியிலாவது, பரந்த வெளி நிலத்திலாவது இவ் ஆட்டம் ஆடப்படும்.

விளையாடும் முறை : ஆடுவார் இருவராயினும் பலராயினும், ஆடுமுறை யொன்றே. இருவராயின், இருவரும் ஒரே குழியில் முன் பின்னாகவாவது, வெவ்வேறு குழியில் உடனிகழ்வாக வாவது, தம் குச்சை வைத்து நுனியிற் கோலால் தட்டியெழுப்பி, அது நிலத்தில் விழுமுன் அடித்து இயன்ற தொலைவு போக்குவர்.யார் குச்சு மிகத் தொலைவிற்போய் விழுந்ததோ அவன் முந்தியாடல் வேண்டும். எழும்பிய குச்சு நிலத்தில் விழுமுன் அதை அடிக்கத் தவறினும், குறைந்த தொலைவு குச்சைப் போக்கினும், பிந்தி யாடல் வேண்டும்.

விளையாட்டைத் தொடங்குபவன், முன் சொன்னவாறு குச்சை யெழுப்பி யடித்து இயன்ற தொலைவு போக்குவன். எழும்பிய குச்சு நிலத்தில் விழுமுன்
அடிக்கத் தவறின் அடுத்தவன் அடிக்க வேண்டும். யார் அடிப்பினும் குச்சை யடித்துப் போக்கிய பின், எடுத்தடிக்கும் நிலையில் கோலைக் குழியருகே
கிடத்தி நிற்பன்.

இன்னொருவன் (எதிரி), தொலைவில், குச்சுப்போகும் திசையிலும் அது விழக்கூடிய இடத்திலும் நின்றுகொண்டிருந்து, அது நிலத்தில் விழுமுன் அதைப் பிடிக்க முயல்வான். பிடித்து விடின், அவன் குச்சடிப்பவனாகவும், முன்பு அடித்தவன் அதை எடுப்பவனாகவும், மாறவேண்டும். பிடிக்க முடியா விடின், குச்சு நிலத்தில் விழுந்தவுடன் அதையெடுத்து, அடித்தவன் குழியருகே கிடத்தியிருக்கும் கோலிற் படும்படி யெறியவேண்டும். 

கோலிற் பட்டுவிடின், அன்றும் இருவர் நிலைமையும் மாறும். படாவிடின், அடிப்பவன் விரைவாய்க் குச்சை யெடுத்து அதை முன்போல் அடித்துப் போக்குவான். அவன் அதை அடிக்குமுன் குச்செடுப்பவன் வேகமாய் ஓடிவந்து அவனைத் தொட்டு விடின், அன்றும், இருவர் நிலைமையும் மாறும். தொடாவிடின்,  குச்செடுத்தவன் முன்போற் குச்செடுக்க வேண்டும். இங்ஙனம், இருவரும் விரும்பிய வரை தொடர்ந்து ஆடுவர். அடித்த குச்சை எடுத்தெறி தலுக்கு எடுத்தூற்றுதல் என்று குச்சடிக்கிறவன் எவ்வகையிலும் தவறாதும் பிடி கொடாதும் அடிப்பின், விளையாட்டை நிறுத்தும்வரை எத்தனை முறையும் தொடர்ந்து அடிக்கலாம்.

பல இணையர் சேர்ந்து ஆடின், தொடங்குங் கட்சியைத் தீர்மானிக்கும் ஆட்டத்தில் குச்சை மிகத் தொலைவில் போக்கிய கட்சியார் முந்தியாடுவர்; இதற்கு, ஒரு கட்சியார் அனைவரும் மிகத் தொலைவிற் போக்க வேண்டும் என்னும் யாப்புறவில்லை. அவருள் ஒருவர் போக்கினும் போதும். முந்தியாடுங் கட்சியார் அடிப்பாரும் பிந்தியாடுங் கட்சியார் எடுப்பாருமாய், ஆட்டந் தொடங்கும்.

அடிக்குங் கட்சியாருள் ஒவ்வொருவனும் அடிக்குங் குச்சை, அவ்வவனுடன் உத்திகட்டிய எதிர்க்கட்சி இணைஞனே எடுப்பான். இணைஞனுக்கு உத்தியாள் என்று பெயர். அடித்த குச்சை உத்தியாள் உடனே வந்து எடுக்காவிடின், அடித்தவன் அதைத் தொடர்ந்து அடித்து, மிகத் தொலைவிற் போக்குவது முண்டு.எடுக்குங் கட்சியார் எல்லாருங் குச்சுக்களை யெறிந்த பின்புதான், அடிக்குங் கட்சியார் ஒரே சமையத்தில் மீண்டும் அடிப்பர்.

தவறும் வகையும் தவறாது ஆடும் வகையும், இருவர் ஆடினும் இரு கட்சியார் ஆடினும் ஒன்றே. ஒவ்வொருவனாக வோ ஒருங்கேயோ அடிக்கும் கட்சியார் அனைவரும் தொலையும் வரை (அதாவது தோற்கும்வரை), எதிர்க்கட்சி நிலைமை மாறாது. ஆயின், அடிக்குங் கட்சியார் தொலையத் தொலைய,
அவருடைய இணைஞரான எதிர்க்கட்சியார் நின்றுகொண்டே வருவர். அடிக்குங் கட்சியின் இறுதியாளுந் தொலைந்த பின், இருகட்சியும் வினைமாறும்.

விளையாட்டின்த் தோற்றம்  : இவ் விளையாட்டு வேட்டை வினையினின்று தோன்றியதாகத் தெரிகின்றது. குறிஞ்சி நிலத்திலுள்ள குறவராயினும், குறிஞ்சி நிலத்திலும் பாலை நிலத்திலுமுள்ள வேடராயினும், பிறராயினும், காட்டிலுள்ள கோழி முயல் முதலிய ஒருசார் உயிர்களைக் குறுந்தடி கொண்டே யெறிந்து கொல்வது வழக்கம். இவ் வழக்கத்தினின்றே "கோழி யடிக்கக் குறுந்தடி வேண்டுமா?" என்னும் பழமொழியும் எழுந்துளது.

ஒரு குறவனும் அவன் கையாளான சிங்கன் என்னுங் குளுவனும் குறுந்தடி கொண்டு வேட்டையாடின், குறவன் புதர் புதராய்க் குறுந்தடியால் தட்டிப் பார்ப்பான். ஒரு புதரினின்று திடுமென்று ஒரு காட்டுக் கோழி பறக்கும்; அல்லது ஒரு முயல் குதிக்கும். அந் நொடியே, குறவன் அதைக் குறுந்தடியால்
அடிப்பான்; அல்லது எறிவான். கோழி அல்லது முயல் அடிபட்டுச் சற்றுத் தொலைவிற் போய் விழும். குளுவன் ஓடிப்போய் அதை எடுத்து வருவான்.
வேறு நிலத்தினின்று இருவர் வேட்டையாடச் செல்லினும் இவ்வகையே நேரும்.

இத்தகை வேட்டை வினையையே சில்லாங் குச்சுக் குறிக்கின்றது. குச்சை யடிப்பவன் அதைத் தட்டியெழுப்புவது, குறவன் புதரைத் தட்டிக் கோழி முயலை யெழுப்புவது போன்றது. குச்சை மீண்டும் அடிப்பது, அவ் வுயிரி களைக் குணிலால் அடிப்பதும் எறிவதும் போன்றது. குச்சு தொலைவிற் போய் விழுவது, அடிபட்ட வுயிரிகள் தொலைவிற்போய் விழுவது போன்றது. குச்சை எடுப்பவன் அதை எடுத்தெறிவது, அடிபட்டு விழுந்த வுயிரிகளைக் குளுவன்
எடுத்தெறிவது அல்லது எடுத்து வருவது போன்றது.

விளையாட்டின் பயன்  : மேலெழும் ஒரு பொருளை விரைந்து குறிதப்பாது வன்மையாய் அடிப்பதும்; வானின்று விழும் பொருளை அது தகாத இடத்தில்
விழுமுன்னும், தாழப் பறக்கும் பறவையை அது தன்னைவிட்டுக் கடக்கு முன்னும் பிடிப்பதும்; தொலைவிலுள்ள பொருளைக் குறிதப்பாது ஒரு கருவியால் அடிப்பதும்; ஒரு பொருளைத் தொலைவிலுள்ள குறித்த இடத்தில் எறிவதும்; ஒரு குறித்த இடத்திற்கு விரைந்து ஓடுவதும்; ஆகிய வினைப் பயிற்சியே இதன் பயனாம்.

                                                                                                                   தொடரும்..................

Thursday, April 12, 2012

விளையாடுவோம் வாருங்கள் - 7

பாகம்-6 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் , தொடர்ந்து விளையாடுவோம்.

முக்குழியாட்டம்

சேலம் வட்டார முறை

விளையாட்டின் பெயர்  : சுவரடி யரங்கிற்குள் இருகுழிக்குப் பதிலாக முக்குழி வைத்தாடும் கோலியாட்ட வகையே முக்குழியாட்டம்.

விளையாடும் முறை  : சென்ற பதிவில் சொன்ன இரு குழியாட்டமும் முக்குழி யாட்டமும் ஒன்றே ,இட வேறுபாடு காரணமாகப் பின்வருமாறு மூவகை வேற்றுமை யுண்டு.

திருச்சிராப்பள்ளி

(1) கருவி : இருகுழி 

(2) முறை : மூட்டல் ஒரே தள் 

(3) பெயர் : இஷ்டம் அல்லது கிசேபி வெளிமட்டு 'லைன்' அல்லது 'லாக்கு'

சேலம்

(1) கருவி :முக்குழி

(2) முறை :மூட்டல் 3 தள் வரை

(3) பெயர் : முக்குழியாட்டம் வெளி டிப்பு கீர் அல்லது கீறு

தெல் விளையாட்டு 

தெல்லைத் தெறித்து விளையாடுவது தெல்.

கோலியும் தெல்லும் கருவி வகையாலன்றி விளையாட்டு வகையாலும் ஏறத்தாழ ஒன்றே. கோலிக்குப் பதிலாய்த் தெல்லுக்காயைப் பயன்படுத்துவதே தெல்லாட்டு.  

ஆயினும், கருவி வேறு பாட்டிற்குத் தக்கபடி தெறிக்கும் வகையும் வேறு பட்டதாம். 

தெல்லுக்காய் 
இடக்கைச் சுட்டுவிரற்கும் பெருவிரற்கும் இடையில் இடுக்குவது
இரு கருவிக்கும் பொதுவெனினும், வலக்கைச் சுட்டுவிரலால் தெறிப்பது கோலிக்கும், வலக்கை நடுவிரலால் தெறிப்பது தெல்லிற்கும், சிறப்பாம். சிலர்
வலக்கை மோதிர விரலைத் தெல்லிற்குப் பயன்படுத்துவர். கோலியைத் தெறிக்கும் போது வலக்கை யகங்கை முன்னோக்கி நிற்கும்; தெல்லைத் தெறிக்கும் போது அது மேனோக்கி நிற்கும்.

தெல்லுத் தெறித்தல் பாண்டிநாட்டு விளையாட்டு.

தெல்லுக்காய்( சூட்டுக்கொட்டை )குறிஞ்சி நிலத்தில் இயற்கையாய் வளரும் ஒருவகை மரத்தின் விதை. தெல் என்னுஞ்சொல் தெறிக்கப் படுவது என்னும் பொருட் காரணத்தை யுடையது.
                                                                                                                 
                                                                                                                 தொடரும்.....................